கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பேரு க்கு ஆயுள் தண்டனை விதிப்பு!!

சென்னை:
கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர மாவட்ட செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு, தனது அமைப்பின் பணிகளை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கோவை சுப்ரமணியம்பாளையம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது, வழியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

அதன்பின் போலீஸார் நடத்திய விசாரணையில் எஸ்டிபிஐ கொடிக்கம்பம் நடப்பட்ட போது ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. எனினும், கொலையாளிகள் குறித்து எந்த நேரடி ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு வழக்கு மாற்றப் பட்டது. சிபிசிஐடி போலீஸாரின் தொடர் விசாரணையின் முடிவில் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பின், தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) வழக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், கைது செய்யப்பட்ட அனைவரும், தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த சையது அபுதாஹிர், சதாம் உசேன், சுபைர், முகமது முபாரக், முகமது ரபிகுல் ஹசன் ஆகிய 5 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

அதில், தீவிரவாதம் குறித்த பதற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்க இந்தப் கொலை நடத்தப்பட்டுள்ளது என்று குற்றப்பத்திரிகையில் என்ஐஏ குற்றம் சாட்டியது.

என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுமை யாக நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி நேற்று மாலை இறுதித் தீர்ப்பை அளித்தார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த சையது அபுதாஹிர் (31) மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், சதாம் உசேன் (29), சுபைர் (36), முகமது முபாரக் (36), முகமது ரபிகுல் ஹசன் (35) ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.30,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற 4பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் யாரையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *