உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடித்த மகாவிஷ்ணு !!

சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் ஆகிய எட்டு வகை விரதங்களும் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக முக்கிய விரதங்களாக கருதப்படுகின்றன.

இதில் சிவசக்தி தத்துவத்தை விளக்கும் விரதமாக உமா மகேஸ்வர விரதம் உள்ளது.

“சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை” என்பார்கள். சிவம், சக்தி இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்தால்தான் உலகம் இயங்கும் என்பதை உணர்த்தும் தத்துவமே இதுவாகும்.

அவ்வாறு சிவனும், சக்தியும் இணைந்த வடிவமே ‘உமா மகேஸ்வரர்” வடிவம். சிவபெருமானின் மிகவும் அற்புத வடிவங்களில் ஒன்றாக உமா மகேஸ்வரர் வடிவம் உள்ளது.

பிருகு முனிவர், தன்னை வழிபடாமல் சிவபெருமானை மட்டும் வழிபடுவதை கண்டு வருந்திய பார்வதி தேவி, கடும் விரதம் இருந்து சிவபெருமானின் இடது பாகத்தை பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன.

புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் உமா மகேஸ்வர விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர், தம்பதிகள் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 16 ஆண்டுகள் உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடிப்பது முறையான வழிபாடாகும்.

உமா மகேஸ்வர விரத மகிமை

ஒரு முறை துர்வாச முனிவர், கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசித்தார். அப்போது சிவபெருமான், தன்னுடைய கழுத்தில் இருந்த வில்வ மாலையை துர்வாச முனிவருக்கு அளித்தார். அதன்பின் அந்த மாலையுடன் வைகுண்டம் சென்ற துர்வாசர், மகாவிஷ்ணுவை தரிசித்தார். சிவபெருமான் அளித்த அந்த புனித மாலையை மரியாதையுடன் மகாவிஷ்ணுவிடம் கொடுத்தார்.

ஆனால் மகாவிஷ்ணு, அந்த மாலையின் மகத்துவம் அறியாதது போல அலட்சியமாக தனது வாகனமான கருடனின் மீது போட்டார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த துர்வாசர், லட்சுமி தேவியை பிரிந்து வாழும்படி சாபமிட்டார். இதனால் மகாவிஷ்ணு ஒளி இழந்தவராக ஆனார். தன் தவறை உணர்ந்த மகாவிஷ்ணு, சாப விமோசனம் அருளும்படி கவுதம முனிவரிடம் வேண்டினார்.

கவுதம முனிவர், உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடிக்குமாறு அருளினார். அதன்படி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடித்தார். அவரது பக்திக்கு மெச்சிய சிவபெருமானும், பார்வதி தேவியும் உமா மகேஸ்வரராக காட்சி அளித்தனர். பின்னர் சாபம் நீங்கிய மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை மீண்டும் அடைந்ததாக கூறப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் உமா மகேஸ்வர விரதத்தை மேற்கொள்ளலாம். மகளுக்காகவும், மருமகளுக்காகவும், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வீட்டில் உள்ள பெரியவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

இந்த ஆண்டு 26.9.2026 (சனிக்கிழமை)உமா மகேஸ்வர விரதம் அனுசரிக்கப்படுகிறது. விரதம் இருப்பவர்கள், விரத நாளன்று காலையில் குளித்துவிட்டு இறைவனை நினைத்து சங்கல்பம் எடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து பூஜைகள் செய்யவேண்டும். உமா மகேஸ்வரர் சிலை அல்லது படத்தை வைத்தும் வழிபாடு செய்யலாம்.

சிலையை வைத்து வழிபடுபவர்கள் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோவிலுக்கு கொடுத்துவிட வேண்டும்.

முதல் ஆண்டு விரதம் இருப்பவர்கள், நைவேத்தியமாக அதிரசம் படைப்பது விசேஷம். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் நைவேத்தியமாக படைக்கலாம்.

விரத பலன்

விரதம் இருப்பவர்கள்,வழிபாடு முடிந்ததும் ஏழைகளுக்கு உணவு அளித்தபின்னரே சாப்பிடவேண்டும். உமா மகேஸ்வர விரதத்தை மேற்கொண்டால் பிரிந்த தம்பதிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகும்.

தம்பதிகளின் ஒற்றுமை மேலும் பலப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தொடர்ந்து 16 ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொண்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *