டெஹ்ரான்:
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. தற்போது இரு நாடுகளும் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி உள்ளன.
இந்த சூழலில் 7 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை ஈரான் நேற்று முன்தினம் முன்மொழிந்தது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்து விட்டார்.
வரும் நவம்பரில் ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா நேற்று கூறியதாவது: மேற்காசிய பிராந்தியத்தில் இக்கட்டான சூழல் நிலவுகிறது.
இந்த பிராந்தியத்தில் மீண்டும் மிகப்பெரிய போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. எதிரியின் (அமெரிக்கா) தாக்குதல்களை எதிர்கொள்ள ஈரான் ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் எதிரிக்கு (அமெரிக்கா) பேரழிவு ஏற்படும். இஸ்ரேலை பாதுகாக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான குறிக்கோள்.
இதற்காகவே வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தளங்கள் முஸ்லிம் நாடுகளின் பாதுகாப்புக்கு ஒருபோதும் உத்தரவாதம் அளிக்காது.
வளைகுடா பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் மூட வேண்டும். அப்போதுதான் இந்த பிராந்தியத்தில் நிரந்தர அமைதி திரும்பும்.
ஈரான் மீது இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து உள்ளோம். இவ்வாறு முகமது அக்ரமினியா தெரிவித்தார்.
ஈரான் கடற்படை வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஆளில்லாத நீர்மூழ்கிகள் மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்க கடற்படை திட்டமிட்டு உள்ளது. அண்மையில் யு.எஸ். ரெமுஸ் 600 ரகத்தைச் சேர்ந்த நீர்மூழ்கியைக் கைப்பற்றினோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு நீர்மூழ்கியை கைப்பற்றி உள்ளோம்.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்தமானது. எங்களது அனுமதி இல்லாமல் எந்தவொரு கப்பலும் ஜலசந்தியை கடந்து செல்ல முடியாது.
இவ்வாறு ஈரான் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.