சத்தியபாமா, மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதபோது ஓடோடி வந்து தேற்றிய விஜய்…

தாராபுரம்;

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதபோது முதல்வர் விஜய் ஓடோடி வந்து தேற்றினார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய தவெக வேட்பாளர் சத்தியபாமா, அதிமுகவில் இருந்து தான் வெளியேறிய சூழல் குறித்துப் பேசினார். ” அதிமுகவில் இருந்து வெளியேறியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துதான் சிறந்த சாட்சி.

அதேநேரத்தில், ஒரு பொதுச்செயலாளர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிசாமிதான் உதாரணம்.

திமுகவுடன் மறைமுக உடன்படிக்கை வைக்கப்பட்டதால்தான் நான் அதிமுகவில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய சத்தியபாமா, தவெக தலைவர் விஜய்யைப் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். “மக்கள் மீது பேரன்பு கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மறுபிறவியாக இருப்பாரோ என்று எனக்குத் தோன்றுகிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பிரசார உரையின் போது தான் சந்தித்த விமர்சனங்களைப் பற்றிப் பேசிய சத்தியபாமா, “நான் ஒரு பெண் என்றும் பாராமல் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி மிகவும் அசிங்கமாகப் பேசினார்கள்” என்று கூறிக்கொண்டிருந்த போதே மேடையில் திடீரெனக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.

இதைக் கண்டு உடனடியாக அருகில் வந்த தவெக தலைவர் விஜய், சத்தியபாமாவின் தோள்களைப் பற்றிக்கொண்டு அவரை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

விஜய்யின் இந்தத் தோழமையான நடவடிக்கை தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் தேற்றியதைத் தொடர்ந்து மீண்டும் உரையைத் தொடர்ந்த சத்தியபாமா, “நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் உங்கள் முன்பு வந்து இவ்வளவு தைரியமாக நிற்கவோ பேசவோ முடியுமா? திமுகவால் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவளித்து நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்” என நம்பிக்கையுடன் உரையை முடித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *