முதல்வர் விஜய் தலைமையி லான தவெக அமைச்சர வையில் பாமக இடம் பெறுமா என்பது குறித்து சவுமியா அன்புமணி விளக்கம்!!

திருவண்ணாமலை / விழுப்புரம்:
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் பாமக இடம் பெறுமா என்பது குறித்து சவுமியா அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாமக தலைவர் அன்புமணியின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நவீன பொது சுகாதார வளாகத்தை தருமபுரி தொகுதி எம்எல்ஏ சவுமியா அன்புமணி நேற்று திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் குரல் கொடுத்து வருகிறோம்.

பாமகவின் நீண்டநாள் கோரிக்கை என்பது அனைத்து ஏரிகள், குளங்கள், அணைகள் தூர்வார வேண்டும், தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பதுதான்.

இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்பதில், உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

காவல்துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்தால் சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் சவுமியா அன்புமணி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மது இல்லாத தமிழகம் என்ற நிலை உருவாக வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் மது கிடைக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்க இருக்கிறோம்.

சமூக பொருளாதாரம், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னையில் அக்.2-ம் தேதி இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதை தமிழகம் முழுவதும் நடத்த உளளோம்.

எஸ்ஐஆர் குறித்து நிறைய தகவல்கள் தெரிய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் எஸ்ஐஆர் சீர்திருத்தம் நடத்தப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் தேவையானதா..? குளறுபடி நடைபெற்றுள்ளதா என்ற முழுவிவரம் தெரிந்த பிறகுதான் அதுகுறித்து கருத்து கூற முடியும்.

அதேபோல், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு தொடர்பான முழு விவரம் தெரிந்த பிறகுதான் தவறு நடைபெற்றதா? என்பது தெரிய வரும்.

திண்டிவனம் – நகரி, திண்டிவனம் – திருவண்ணாமலை இடையிலான ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, மத்திய அரசுடன் பேசியுள்ளார். தற்போது தனி வட்டாட்சியர் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *