இறைவன் அருள் கிடைக்க உண்ணாமல் இருந்து வழிபாடு செய்வதை ‘விரதம்’ என்கிறோம். ‘நோன்பு’ என்பதே இதன் தூய்மையான தமிழ்ச்சொல்.
வார விரதங்கள், மாத விரதங்கள், வருட விரதங்கள், அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதி விரதங்கள் என்று எண்ணற்ற விரதங்கள் இருக்கின்றன.
தெய்வ சிந்தனை
ஜாதக அடிப்படையில் எந்த விரதம் இருந்தால் நல்லது என்பதை அறிந்து, உங்களின் வேண்டுதலுக்கு ஏற்ற விரதங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இனிய பலன்களைப் பெறலாம். விரதம் இருக்கும் நாள் முழுவதும் தெய்வத்தின் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். எதிர்மறை சொற்களைப் பேசக்கூடாது.
மற்றவர்களின் மனதைப் புண்பட வைக்கக்கூடாது. உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம்.
விரதத்தின்போது தவிர்க்க வேண்டியவை
விரதம் இருக்கும் நாட்களில் பகலில் தூங்கக் கூடாது. அந்த நேரத்தில் சினிமா, டி.வி. பார்ப்பது, கேளிக்கை விருந்துகளில் கலந்துகொண்டு குடும்பக் கதைகளைப் பேசுவது, பிறருடன் சண்டை போடுவது, உரக்கப் பேசுவது, வன்மையான வார்த்தைகளால் பிறரைத் திட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுது தான் விரதத்திற்கான முழுப் பலனும் கிடைக்கும்.
ஆடைகள்
விரதத்தை நிறைவு செய்யும் பொழுது எளிமையான உணவுதான் உண்ண வேண்டும். இதுவே இறைவனின் அருளைப் பெற வழியாகும்.
அன்றையதினம் அணியும் ஆடைகள் கூட, உங்களுக்கு யோகம் தரும் நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் நல்லது. 24 மணி நேரமும் இறை சிந்தனையோடு, இறைவனின் நாமங்களை உச்சரித்தபடி இருக்கவேண்டும்.
இறை சிந்தனை
விதவிதமான உணவு எதிரில் இருந்தும், அதைச் சாப்பிடாமல் மனக்கட்டுப்பாடுடன், இறை சிந்தனையில் இருப்பதுதான் விரதமாகும். சிலர் வாரத்தின் ஏழு நாட்களுமே விரதம் இருப்பார்கள். அப்படியும் இருக்கக்கூடாது.
பெண் தெய்வ வழிபாடு
நமது கோரிக்கை என்ன, அதற்குரிய கிரகம் என்ன, அதற்குரிய கிழமை என்ன, அதற்குரிய தெய்வம் என்ன, அதற்குரிய விரதம் என்ன என்பதை நன்கு ஆராய்ந்து தெரிந்து, அதன்பின் விரதம் இருந்தால், அதற்கு கைமேல் பலன் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பெண் தெய்வ வழிபாட்டிற்கு பெருமை சேர்க்கும் தலங்கள் தமிழ்நாட்டில் ஏராளம் இருக்கின்றன. அதில் நம்மால் இயன்ற கோவிலுக்குச் சென்று மறவாமல் நவராத்திரியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்பங்கள் தானாக வந்து சேரும்.
மதுரை மீனாட்சி
மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு கருமாரி, சமயபுரம் மாரியம்மன், காரைக்குடி கொப்புடையம்மன், நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், கீழக்கோட்டை காளியம்மன், சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன், இரணியூர் பத்ரகாளியம்மன்,
மயிலாப்பூர் கற்பகாம்பாள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், கோவை கோணியம்மன், திருநெல்வேலி காந்திமதியம்மன், வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி, பொள்ளாச்சி மாசானி அம்மன், திருக்கடவூர் அபிராமி அம்மன், மயிலாப்பூர் கற்பகாம்பாள் போன்ற பெண் தெய்வங்கள், உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற தெய்வங்களாக இருக்கின்றனர்.
அவர்களின் சன்னிதிக்கு நேரில் சென்று வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும்.