மகளிருக்கு ‘வெற்றிப் பயணம்’ திட்ட தொடக்க விழா!!

மதுரை:
மதுரையில் இன்று மகளிருக்கு ‘வெற்றிப் பயணம்’ திட்ட தொடக்க விழா எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மண்டலத்தில் 705 பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக முதல்வர் விஜய் சட்டப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மகளிருக்கு கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்‘ திட்டம் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி அக்.2-ம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தை சென்னை கோயம்பேடு டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மண்டலத்தில் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் வெற்றிப்பயணம் தொடக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து கட்டணமில்லா பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் எம்எல்ஏக்கள் அ. கல்லாணை, தங்கபாண்டியன், மதார் பதூருதீன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கவுரவ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தின் மூலம் 405 மாநகர, நகரப் பேருந்துகள், 64 எக்ஸ்பிரஸ் பேருந்துகள், 196 டீலக்ஸ் பேருந்துகள் உட்பட 665 நகரப் பேருந்துகள், மேலும் 40 புறநகர்ப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 705 பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இயக்கப்படுகின்றன.

இதில், மகளிர் மட்டுமின்றி திருநர்களும் கட்டணமில்லாப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மேலாண் இயக்குனர் வி. சரவணன், பொது மேலாளர் ஜெ.பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *