தவெக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தான் மக்களின் மாற்றமாக இருக் கும்; திமுகவிற்கு வெற்றியை தேடித்தரும் – திமுக வேட் பாளர் சுகன்யா!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமாகினர்.

இதனையடுத்து இந்த 2 தொகுதிகளுக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதில் மதுராந்தகத்தில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேலும், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மா.கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி. தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதேபோல் சுயேச்சைகள் உள்பட இந்த தொகுதியில் மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

2 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமானும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இந்த பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த மையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யா தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

  • தவெக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தான் மக்களின் மாற்றமாக இருக்கும். திமுகவிற்கு வெற்றியை தேடித்தரும்.
  • தவெகவின் 3 மாத ஆட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் வெளிப்படும் என்று அவர் தெரிவித்தார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *