சென்னை:
சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு பல்துறை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு. அந்த தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் அவர் பிரபலம் அடைந்தார்.
ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு, கடந்த மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த 23-ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்ததால், மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அவரது உடல்நிலை அறிக்கைகளை வெளியிட்டு வந்தது.
ஆனால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அறிக்கைகள் வெளியாகாததால், மீண்டும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், வி.எஸ்.பாபு சுவாசிக்க உதவியாக கழுத்துப் பகுதியில் டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால், அது தொடர்பாக அவரது தரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அதுபோன்று எந்தக் கருவியும் பொருத்தப்படவில்லை. வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்” என்றனர்.