ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் கணவர், மகள் உயிரிழந்த நிலையில், சூனியக்காரி என கிண்டல் செய்யப்பட்ட பெண் ஒருவர் அம்மாநில நிர்வாக பணித் தேர்வில் (ஆர்ஏஎஸ்) வெற்றி பெற்று சாதனை் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரைச் சேர்ந்த ரோகினி குர்ஜர் 2006-ம் ஆண்டு பிஏ பட்டம் பெற்று தனது கிராமமான குக்ராவில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
பின்னர், அவர், 2011-ல் திருமணம் செய்து கொண்டு, 2013-ல் தாயானார். 2021-ல் அவரது கணவர் உயிரிழந்தார். இது ரோகினிக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.
ரோகினிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்ததால், மாமியார் வீட்டில் அவரை கேலி செய்ததுடன், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
அத்துடன், கிராமத்தில் சிலர் கணவரின் மரணத்துக்கு ரோகினிதான் காரணம் என்று குற்றம்சாட்டி, அவரை ‘சூனியக்காரி’ என்று அழைத்தனர்.
எனினும், ரோகினியின் சகோதரர் நரேந்திர குர்ஜரும், கணவரின் பாட்டி புஷ்பா தேவியும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். ரோகினி மீண்டும் படிப்பைத் தொடங்க வேண்டும் என்று பாட்டி புஷ்பா தேவி தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.
இதையடுத்து, 2021-ம் ஆண்டு ரோகினி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார். ரோகினி ராஜஸ்தான் நிர்வாகப் பணித்தேர்வில் (ஆர்ஏஎஸ்) தனது முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார்.
ஆனால், முதன்மைத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வெற்றி பெறவில்லை. மீண்டும் முயற்சி செய்த அவர், 2023-ம் ஆண்டு தேர்வுக்குத் தயாராக ஜெய்ப்பூருக்குச் சென்றார்.
அப்போது அவரது பாட்டி புஷ்பா தேவியும் உயிரிழந்தார். ஒருவழியாக அந்த துயரத்திலிருந்து மீண்டு, ரோகினி தனது படிப்பைத் தொடர்ந்தார்.
ஆனால், 2024-ம் ஆண்டு அவரது 10 வயது மூத்த மகள் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனால், நிலைகுலைந்து போன ரோகினி ஆர்ஏஎஸ் முதன்மைத் தேர்வை மீண்டும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்தார்.
ஆனால், அவரது குடும்பத்தினர், குறிப்பாக, அவரது இளைய மகள் பூமிக்காகவாவது தேர்வை எழுத வேண்டும் என்று அவரை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே, ஆர்ஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு ரோகினி விபத்தில் சிக்கினார். இதில் அவரது கண் கடுமையாக காயமடைந்தது.
ஒரு கண்ணில் கட்டுப் போடப்பட்டிருந்த நிலையில், மற்றொரு கண்ணின் உதவியுடன் தேர்வு எழுதினார்.
2024-ம் ஆண்டு ஆர்ஏஎஸ் தேர்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விதவைப் பிரிவில் 2-ம் இடம் பிடித்தார்.
அவருக்கு ராஜஸ்தான் கணக்கு பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த விடாமுயற்சி இறுதியில் அவரை ஆர்ஏஎஸ் தேர்வின் வெற்றிக் கோட்டை கடக்கச் செய்தது.