ராமநாதபுரம்,
பல ஆண்டுகளாக இருந்த நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததால் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு சீர்வரிசை கொடுத்து முஸ்லிம் பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடி பகுதியில் நீண்ட காலமாக அளவீடு செய்யப்படாமல் இருந்து வந்த நிலம் தொடர்பாக, தனியார் அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தி நிலத்தை முறையாக அளவீடு செய்து தீர்வுகாண உத்தரவிட்டார்.
அதன்பேரில் கீழக்கரை தாசில்தார் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அள வையர்கள் நேரடியாக சென்று நிலத்தை ஆய்வு செய்து அள வீடு செய்து, பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட வரு வாய்த்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக தட்டுகளில் எடுத்து வந்து மாவட்ட கலெக்டரிடம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
மக்களால் அன்புடன் வழங்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
மேலும், பொதுமக்களிடம் உங்களது கோரிக்கைகளை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.