சென்னை:
அமைச்சர்கள் தங்குவதற்கு ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய வீடியோ மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ஆஸ்டின் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவழித்ததாகவும், இம்முறை அமைச்சர்கள் தங்குவதற்கு ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா பேசியது போன்ற வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ஆஸ்டின் இன்று புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்டின், “ சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும்.
தேர்தல் விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் குறிப்பிட்ட அளவை தாண்டி செலவு செய்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகபட்சமாக 6 மாத காலம் சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் விதிமுறை.
இந்த அடிப்படையில் அமைச்சர்கள் தங்குவதற்கு 14 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக சத்யபாமா வாக்குமூலமாக கொடுத்திருப்பதை ஆய்வு செய்து, அது வேட்பாளர் செலவில் சேர்க்கப்படாமலோ, வங்கிக் கணக்கில் பரிமாற்றம் இல்லாமலோ இருக்குமேயானால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.
அந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டதாக சத்யபாமா கூறுகிறார். ஆனால் அந்த வீடியோ போலியானதாக தெரியவில்லை. கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்ததாக சத்யபாமா கூறியுள்ளார்.
அதன்படி ஆய்வு செய்தால், சத்யபாமா தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 6 மாதம் சிறைதண்டனையும், 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடையும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தாராபுரத்தில் தவெக சார்பில் காமாட்சி விளக்கும், புடவையும் சத்யபாமா படத்துடன் வீடு வீடாக சென்று கொடுத்துள்ளனர். தவெக சார்பில் டிபன் பாக்ஸும், பணமும் கொடுத்ததாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றார்.