பழநியில் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் கடந்த 2 மாதமாக தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தர் உட்பட 2 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீஸார்!!

திண்டுக்கல்:

பழநியில் ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் கடந்த 2 மாதமாக தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தர் உட்பட 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு சட்ட விரோதமாக 2 தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது  தொடர்பாக 88 பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் உட்பட இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே உயிரிழந்தார். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பத்திர எழுத்தர் சிவக்குமார் உட்பட 5 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் குறித்த எந்தத் தகவலும் தெரிய வராததால் போலீஸாரால் அவர்களை நெருங்க முடியவில்லை.

அதனால் கடந்த 2 மாதமாக அந்த 5 பேரையும் கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸார் திணறி வந்தனர்.

இதேபோல், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி குறித்தும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் இந்த மோசடி தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துவிட்டதால், இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை (அக்.7) காலை, பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த பதிவுத்துறை இளநிலை உதவியாளர் சிவசங்கரி, கடந்த 2 மாதமாக தலைமறைவாக பத்திர எழுத்தர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் அவர்களது வீடுகளில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே இளநிலை உதவியாளர் சிவசங்கரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *