விசாகப்பட்டினம்:
இந்தியக் கடற்படையின் திறனை அதிகரிக்கும் விதமாக ரூ.19,000 கோடி மதிப்பிலான புதிய ஆதரவு கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தியக் கடற்படையின் ஆற்றலை அதிகரிக்க பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ரூ.19,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் 5 ‘ஃப்ளீட் சப்போர்ட்’ ரக ஆதரவுக் கப்பல்களில் முதலாவது உள்நாட்டுக் கப்பலான ‘சூர்யா’ செவ்வாய்க்கிழமை முறைப்படி கடலில் இறக்கி தொடங்கி வைக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் தளத்தில் நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். கடற்படைத் தலைவர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
225 மீட்டர் நீளமும் 32 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆதரவுக் கப்பல், நடுக்கடலில் இயங்கும் இந்தியப் போர்க்கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், குடிநீர், ஆயுதங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை உடனுக்குடன் விநியோகிக்கப் பயன்படும்.
இதன் மூலம் போர்க்கப்பல்கள் மீண்டும் துறைமுகத்துக்கு திரும்ப வேண்டி இருக்காது. இதனால் நீண்ட நாட்கள் தொடர்ந்து கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்.
மேலும், மீதமுள்ள 4 கப்பல்களும் 10 மாத இடைவெளியில் ஒவ்வொன்றாகக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.