கோவை, நீலகிரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு!!

சென்னை:

தமிழகத்தில் நாளை (அக்.8) கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், டெல்டா உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை, உள் தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.8) கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், டெல்டா மாவட்டங்களான  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்.9-ம் தேதி  கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.10-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் பில்லூர் அணையில் 12 செமீ,  நீலகிரி மாவட்டம் கெங்கரையில் 11 செமீ, கோவை மாவட்டம் காரமடையில் 10 செமீ, கோவை மாவட்டம் சிறுமுகை, சிக்கதாசம்பாளையம், வடவள்ளி (கோயம்புத்தூர்) நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை, கோத்தகிரியில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *