சென்னை:
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்கவும், மின்வெட்டைத் தவிர்க்கவும் வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மின்சாரத் தேவை பன்மடங்கு அதிகரித்தது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வெளிச்சந்தையில் ஒரு யூனிட்டுக்கு சராசரியாக ரூ.20 வரை செலுத்தி மின்சாரம் வாங்கப்பட்டதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருந்தார். மேலும், கூடுதலாக 1,500 மெகாவாட் மின்சாரமும் குறுகிய கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டது.
மத்திய மின்துறை வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, வரும் 2026- 27ம் நிதியாண்டில் தமிழகத்தின் உச்ச மின்தேவை 23,314 மெகாவாட் வரை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் வெட்டை சமாளிக்க மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய மின்சார வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
வரும் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பீக் ஹவர்ஸ் எனப்படும் மாலை 6 மணி – நள்ளிரவு 12 மணி வரை தேவையான 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையான 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளனர்.
நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும், நிதி இழப்பைத் தவிர்க்கவும் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் நிலையான விலையில் மின்சாரத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மின்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சூரிய ஆற்றல் மேம்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு சூரிய மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
கண்காட்சி அரங்கை அமைச்சர் நிர்மல்குமார் திறந்து வைத்தார்.