ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி முன் னோர்களுக்கு தர்ப்பணம்!!

அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை விட புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய பட்சம் அமாவாசையில் நம் முன்னோர்கள் மட்டுமல்லாது, மறைந்த நமது நண்பர்கள், குருமார்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் ஆகியோருக்கும் திதி கொடுத்து பிதுர் பூஜை செய்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது.

ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன் னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாதசுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.

பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் கோவில் நடை நண்பகல் 1 மணி வரை சாத்தப்பட்டது. 3 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடைதிறக்கப்பட்டது. இன்று இரவு பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளுகிறார்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகா

லிங்கம் கோவிலில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.

இன்று காலை தாணிப் பாறையில் உள்ள வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்கவும், நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என்றும் வனத் துறையினர் அறிவுரைகள் கூறி மலையேற அனுமதித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *