சென்னை:
காதல், டேட்டிங் செயலிகள், உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட தற்காலக் காதல் குறித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நெட்ஃபிளிக்ஸில் வெளியான #லவ் தொடரின் புரமோஷனுக்காக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘டேட்டிங் செயலிகள் காதலுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ள போதிலும், சரியான ஒருவரைக் கண்டுபிடிப்பதை அது எளிதாக்கவில்லை.
மாறாக, அவை தரும் அதிகப்படியான ‘ஆப்ஷன்கள்’ குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதில் கூட குழப்பம் ஏற்படுகிறது.
தமக்குப் பிடித்தமான ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் தேடலாக உள்ளது. ஆனால் அந்த ஒருவரைக் கண்டுபிடிப்பது கடந்த காலங்களை விட இப்போது சிக்கலான விஷயமாகத் தோன்றுகிறது.
இன்றைய தலைமுறை உறவுகளை வர்ணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புதிய சொற்களும் குழப்பத்தை மேலும் கூட்டுகின்றன. காலம் செல்லச் செல்ல காதல் குறித்த எனது பார்வையும் மாறியுள்ளது.
காதல் என்பது நிம்மதியும் பாதுகாப்பும் ஆகும். மற்றொருவர் முன்னிலையில் நான் நானாகவே இருக்க முடிவது முக்கியம். என்னை பொறுத்தவரை காதல் என்றால் அது ‘கம்ஃபர்ட்’ தான். ஒரு துணையிடம் நான் முதன்மையாக எதிர்பார்ப்பது பாதுகாப்பான உணர்வை.
என் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லவும், நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்.
அந்த நபரின் முன்னிலையில் ஒரு குழந்தையைப் போல என்னால் இருக்க முடிய வேண்டும். எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேச வேண்டும், சுதந்திரம் உணரப்பட வேண்டும்.
காதல் உறவில் நட்புக்கும் மிக முக்கிய இடமுண்டு. திருமணமான எனது நண்பர்களில் பலர் காதலர்களாக மாறுவதற்கு முன்பு நல்ல நண்பர்களாக இருந்தனர்.
சினிமாவில் தீவிரமான காதல் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டினாலும், நிஜ வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சியான மற்றும் எளிமையான காதல் கதைகளே பிடிக்கும்.
வலிகள் நிறைந்த காதல் கதைகளைக் கண்டு சோர்வடைந்து விட்டேன்” என்றார்.