சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாகத் தேர்வான நிர்வாகிகள், அதன் தலைவர் கே.கதிரவன் தலைமையில் நேற்று முதல்வர் விஜய், அமைச்சர் சிடிஆர்நிர்மல்குமார் ஆகியோரை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.கதிரவன் கூறியதாவது: வழக்கறிஞர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளோம்.
அதன்படி, தமிழக வழக்கறிஞர்கள் நல நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இறப்பு நிவாரணத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், விரிவான வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், புதிதாகப் பதிவு செய்யப்படும் இளம் வழக்கறிஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.
பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ள வழக்கறிஞர்களுக்கு வீட்டு வசதித் திட்டம், மாநில சட்டக்கல்வி அகாடமியை நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்களுக்கான அறைகளைக் கட்டித் தர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வருவோரின் தேவையைக் கருத்தில் கொண்டு மருந்தகங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.