எதிர்வரும் 2029 தேர்தலில் படுதோல்வியை எதிர் கொள்ள ராகுல் காந்தி தயாராக இருக்க வேண்டும் – அமித் ஷா பேச்சு!!

புதுடெல்லி:
எதிர்வரும் 2029 தேர்தலில் படுதோல்வியை எதிர்கொள்ள ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியதாவது: “நான் ராகுல் காந்திக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் போராட்டத்தின் உத்தி என்னவென்று மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

எஸ்ஐஆரை ஒரு கருவியாக கொண்டு நாட்டுக்குள் ஊடுருவியவர்களை காக்கும் வகையில் நீங்கள் செயல்படுகிறீர்கள். அதனால் உங்களது தந்திரத்துக்கு மக்கள் சிக்க மாட்டார்கள்.

இதோடு சேர்த்து எதிர்வரும் 2029 மக்களவை தேர்தலில் ராகுல் மற்றும் அவரது கூட்டாளிகள் படுதோல்வியை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். காங்கிரஸ் நான்காவது முறையாக தோல்வியை தழுவும்.

பொய்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகள் மூலம் நீங்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு எட்டாயிரம் பேர் கொண்ட கூட்டத்தை திரட்டுவதற்காக 14 கட்சிகளின் தொண்டர்களைத் ஒன்று கூட செய்வதன் மூலம் உங்களால் ஒருபோதும் தேசத்தின் குரலாகிவிட முடியாது.

உங்களது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள தேசத்தின் வயல்வெளிகள், கிராமங்கள், மலை பிரதேசங்கள் மற்றும் வனங்களிலும் மக்கள் உள்ளனர். அதனை காங்கிரஸ் கட்சி உணர வேண்டும்.

பிஹார், உத்தர பிரதேசம், தமிழகம் போன்ற மாநில மக்கள் பல ஆண்டுகளாக உங்களை புறக்கணித்து வருகின்றனர். எதிர்மறை அரசியல் உங்களுக்கு பலன் தராது. மக்களை அறிந்து, அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

அந்த வகையில் நாட்டு மக்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜக-வுடன் உள்ளனர்.

அந்த உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. இன்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது. அதனால் தான் தாமரை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *