புதுடெல்லி:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் போது, உச்சநீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தன் கையைப் பிடித்து இழுத்ததுடன், ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்டதாக மூன்று மாத கர்ப்பிணியான ரிச்சா பராஷர் என்கிற பத்திரிகையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு ஆளானதாக கூறி, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி உள்பட கட்சியின் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அப்போது, ரிச்சா பராஷர் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுலிடம் கருத்து கேட்க மைக்கை நீட்டியபோது அவர் அதை அகற்றுமாறு சைகை செய்தார்.
நான் அப்படியே செய்தேன். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து மைக்கை நீட்டுவதைப் பார்த்ததால், நானும் மீண்டும் மைக்கை நீட்டினேன்.
அப்போது ராகுல் காந்தி மிகவும் ஆக்ரோஷமான முகபாவனையுடன் முன்னே வந்தார். திடீரென என் கையைப் பிடித்து பலமாக இழுத்தார்.
அதனால் நான் கீழே விழுந்து, என் முழங்கால்களும் வயிறும் தரையில் மோதி காயமடைந்தன. எனது ஒளிப்பதிவாளரையும் ராகுல் தள்ளியதால், அவர் என் மேல் விழுந்தார். அதன்பின் ஏற்பட்ட குழப்பத்தில் மேலும் 4 பேர் என் மீது விழுந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முற்றிலும் மறுத்து, இது பாஜக உருவாக்கிய பிரச்சாரக் கதையென தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் சம்பவம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அவற்றில் எதிலும் ராகுல் கர்ப்பிணி செய்தியாளரைத் தள்ளியது காணப்படவில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “ஆணாதிக்கத்தை உடைப்போம்’ என்று பேசும் ராகுல், ஒரு ரவுடியைப் போல நடந்துகொண்டார். இது கண்டிக்கத்தக்கது” என்றார்.