ராமேசுவரம்:
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் அனோஜன் சிவராசாவின் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை அருகே உள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர் அனோஜன் சிவராசா (27). இவர் சவூதி அரேபியாவில் கட்டுமானத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் நாய் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு வேறு தரப்பினர் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டனர்.
சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன் சிவராசாவும், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனோஜன் சிவராசாவை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றம் மூலம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அனோஜன் சிவராசாவை விடுதலை செய்ய இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கையின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் தொடர்ச்சியான சட்ட ரீதியான முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.