இந்தியா 2047-ஆம் ஆண்டு க்கு முன்பே தற்சார்பு அடையக்கூடும்’ – ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை !!

அமராவதி,
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேசிய ‘சரஸ் மேளா’(கிராமப்புற கைவினை கலைஞர்கள் சங்க பொருட்கள் விற்பனை) கண்காட்சி இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில், கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுக்களை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இதற்காக அங்கு சுமார் 650 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ‘சரஸ் மேளா’ கண்காட்சியின் தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது;-

“தேசிய ‘சரஸ் மேளா’ நிகழ்வு பாரம்பரியமாக டெல்லியில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தென்னிந்திய மாநிலத்தில் முதல் முறையாக ‘சரஸ் மேளா’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்தியா தற்சார்பை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சுயஉதவிக் குழுக்கள் (SHG) மூலம் கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.

2047-ஆம் ஆண்டுக்கு முன்பே தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நாம் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும், ஆந்திரப் பிரதேச அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சரஸ் மேளா, ஊரகக் கைவினை கலைஞர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது.

பெண்கள் சுயசார்பு அடைந்து, மற்றவர்கள் பொருளாதார சுதந்திரம் அடையவும் உதவுகின்றனர். சில பெண்கள் மாதத்திற்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கின்றனர்.

இது பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் ஆற்றலுக்கான சான்றாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *