அதிமுக எம்எல்ஏக்களை தவெக பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை தேவை; ஆளுநரிடம் அதிமுக மனு!!

சென்னை:
அதிமுக எம்எல்ஏக்களை தவெக பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆளுநர் அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர், இன்று (அக்.15) ஆளுநரைச் சந்தித்து மனுவை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூத்தி, “தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் அர்லேகருக்கு அதிமுக சார்பில் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தோம். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் கொடுத்தனுப்பிய மனுவை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்தோம்.

அந்த மனுவில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரை ஏற்கனவே பல கோடி ரூபாய்க்கு விலை பேசி, அவர்களை வாங்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, தமிழகத்தில் இடைத்தேர்தலை கொண்டு வந்தது இந்த தவெக அரசு.

தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், நிலைநிறுத்திக் கொள்ளவும், விதிகளுக்கு முரணாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் மூத்த அமைச்சராக உள்ள ஒருவர், விரைவில் அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என்று அறிக்கை விடுகிறார். தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அவரது இந்த அறிக்கையே சான்றாக உள்ளது.

அந்த அமைச்சர் அளித்த பேட்டி, அறிக்கை ஆகியவற்றை ஆளுநரிடம் நாங்கள் கொடுத்துள்ளோம். குதிரை பேரத்தை நடத்திக்கொண்டிருக்கிற இந்த அரசு மீதும், அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தீர்கள் எனினும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இப்போது மீண்டும் கொடுத்திருக்கிறீர்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, ராஜினாமா செய்தவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே ஆளுநரிடமும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

அதனால், மீண்டும் இன்று ஆளுநரைச் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீதும், இன்றைய மனுவின் மீதும் தமிழகத்தின் முழு நேர ஆளுநர் என்ற அடிப்படையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்திருக்கிறார்கள்.

எந்தெந்த இடங்களில் எல்லாம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் அதிமுக சார்பிலும், எடப்பாடி பழனிசாமி சார்பிலும் நாங்கள் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து இதற்காகப் போராடுவோம்.” எனத் தெரிவித்தார்.

நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “நிச்சயமாக. ஏற்கெனவே அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில்தான், இரண்டு மாதங்களுக்குள்ளாக பதவியை ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தனியாக ஆலோசனை நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில், எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு சிலர் தங்கள் கருத்துகளை பொதுவெளியில் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துகளை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தெரிவித்தால் அதன் மீது அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் எண்ணத்துடன்தான் அவர் உள்ளார். அதிமுக பொதுக்குழுவை அவர் உரிய நேரத்தில் கூட்டுவார்.

இயக்கத்தைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர அவர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இடைத்தேர்தலில் ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்பது யதார்த்தமாக உள்ளது. 2019-ல் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முதல்வர் விஜய் பெற்றுள்ள இந்த வெற்றி ஒரு பெரிய வெற்றி அல்ல. இது தற்காலிக வெற்றியே.

இடைத்தேர்தல் வெற்றி என்பது பணநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. டிஃபன்பாக்ஸ் மூலமாக பணம் விநியோகிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, இது மோசமான தோல்வி அல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி வலுவாக உள்ளது.” என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *