ராமநாதபுரம்:
தமிழகத்தில் முதல்கட்டமாக தொகுப்பூதிய செவிலியர்கள் 2,500 பேரை பணி நிரந்தரம் செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.50 கோடி மதிப்பில் அதிநவீன இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகம் (கேத் லேப்) மற்றும் ரூ.2.10 கோடி மதிப்பில் சுகாதார மைய கட்டிடங்களை அமைச்சர் அருண்ராஜ் நேற்று திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘‘ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இருதய நோய் சிகிச்சைக்கு இனி மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.
இங்கேயே ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் வைத்தல் போன்ற சிகிச்சைகளை பெறலாம்.
அருகிலுள்ள புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட மக்களும் இங்கு சிகிச்சை பெறலாம்.
தமிழகத்தில் 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.
செவிலியர் பற்றாக்குறை அரசின் கவனத்துக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் 4,724 செவிலியர்கள் நேர்மையான முறையில் வெளிப் படைத்தன்மையுடன் நியமிக்க முடிவு செய்து, தற்போது 1,626 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.
முதல்கட்டமாக தொகுப்பூதிய செவிலியர்கள் 2,500 பேரை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
தவெக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம்.
பிரதமரை சந்தித்தபோது நீட் தேர்வு குறித்தும் முதல்வர் பேசியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.