கோவை:
இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் அளிக்காமல் வெற்றி பெற்ற தவெகவுக்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார்.
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மைய தொடக்க விழா கோவையில் நேற்று நடந்தது. அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பிரபாகரன் வரவேற்றார்.
இதில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, அப்துல் கலாமின் மூத்த சகோதரர் மகன் ஜெய்னுலாபுதீன், குடும்ப உறுப்பினர் சேக் சலீம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் பணியாற்றிய (ஐஎன்ஏ) 102 வயதான லெப்டினன்ட் மாதவன் பிள்ளை, ரூட்ஸ் நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது: நம் யாருக்கும் எவ்வித அரசியல் பின்புலமும் கிடையாது.
எளிய பின்புலத்தில் இருந்து, ‘முடியாது’ என்ற வார்த்தையை ஏற்க மறுத்ததால் இங்குள்ளோம்.
கோவையில் கலாம் பிறந்தநாளை ஒட்டி, அவரது பெயரில் அரசியல் பயிற்சிப் பள்ளி தொடங்கி உள்ளோம்.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என கடுமையாக முயற்சித்தார்.
கலாமின் சிந்தனையை பட்டிதொட்டியெங்கும், நாம் கொண்டு செல்வோம்.
அமைப்பு தொடங்கி பிறகு 21 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு ள்ளன. தன்னார்வலர்கள் கன்னியாகுமரி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பல வடிவங்களில் களப்பணி ஆற்றுகிறார்கள்.
இவர்களை வைத்து நாம் மாற்று அரசியலை தருவோம். நாம் ஆரம்பித்திருப்பது ஒரு புரட்சிகரமான திட்டம்.
இன்றைக்கு ஒரு தலைவருக்கு பின்னால், ஒரு பிம்பத்துக்கு பின்னால், பார்ப்பதற்குகூட கண்ணாடிக்குள் இருந்து, காரில் கை காட்டினால்தான் தலைவர். தினமும் மக்களை பார்த்தால் இமேஜ் குறைந்துவிடும் என்பவர்கள் தலைவர்களாக உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் வீ த லீடர்ஸ் சார்பில் களம் இறங்கு வார்கள். யாரைப் பார்த்தும் நமக்கு பயமில்லை.
யாருக்கும் போட்டியாக நாம் இல்லை. மாற்றத்துக்காக நாம் வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஜெம் வீரமணியை தமிழக அரசு கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதையும் வரவேற்கிறேன். தமிழகத்தில் முதல்முறையாக தாராபுரம் மற்றும் மதுராந் தகத்தில் பணம் கொடுக்காமல் இடைத்தேர்தல் நடந்துள்ளது.
பணம் கொடுக்காமல் நடந்த இடைத்தேர்தலை பாராட்டலாம். புதிதாக பலர் சட்டப்பேரவைக்கு வந்திருக்கின்றனர். அதற்கு காரணமான தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்ட வேண்டும்.
விஜய் ஒரு முன்னுதாரணத்தை களத்துக்கு கொண்டுவர வேண்டும். மக்களை பார்ப்பதற்கு ஒரு நாளை ஒதுக்குங்கள்.
நாள் முழுக்க மக்களை பாருங்கள். விஜய்க்கு போதுமான பாப்புலாரிட்டி இருக்கிறது. அவர் ஆந்திரா சென்றாலும் ஆயிரக்கணக்கானவர்கள் நிற்கின்றனர்.
இனி விஜய் வந்தால் பாப்புலர் என காட்ட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் வருகையின்போது, கோவையில் சாலை களின் இருமருங்கிலும் தடுப்புகள் தேவையில்லை. இது பலருக்கு தொந்தரவாக இருக்கிறது. முதல்வர் எளிமையின் உதாரணமாக இருக்க வேண்டும்.
காற்றாலை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழகம், எதற்காக ரூ.35 கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதவி விலகி இருக்கின்றார். அவரிடம் பேசினேன்.
தமிழகத்துக்கு பல பணிகளை செய்திருக்கிறார். அவரது முடிவு என்னவாக இருந்தாலும் அது கட்சியின் முடிவு, பிரதமரின் முடிவு. டெல்லியில் இளைஞர்கள் கேள்வி கேட்பது தவறு அல்ல. அரசு அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வதும் தவறு அல்ல.
இளைஞர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். ஜெயிலர் 2 படத்துக்கு ரஜினிகாந்துக்கு மெசேஜ் போட்டு வாழ்த்து சொல்லிவிட்டேன்.
வேலைகளை முடித்துவிட்டு பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.