சிறப்பு பெற்ற சித்தலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள எடியூரில் சித்தலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர சைவ துறவியான தொண்டாட சித்தலிங்கரின் நிர்விகல்ப சிவ யோக சமாதி அமைந்துள்ள தலம் இதுவாகும்.

சித்தலிங்கேஸ்வரர் ஒரு வீர சைவ மகான், ஆன்மிக குரு, சிவசரண மரபில் வசனங்கள் மூலம் ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர் என்று கூறப்படுகிறது. இவர், 701 வசனங்களை உள்ளடக்கிய ‘சத்ஸ்தல ஞான சாராமிருதம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

மல்லிகார்ஜுனர் – ஞானாம்பிகை என்ற குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை வடிவில் சித்தலிங்கேஸ்வரர் தோன்றியதாக கோவில் வரலாறு கூறுகிறது.

அதனால் அவரை சிவனின் அருள் வடிவமாக பக்தர்கள் கருதுகின்றனர். இவருக்கு தொண்டாட சித்தலிங்கர் என்ற பெயரும் உண்டு.

நம்பண்ணா என்ற சிவ பக்தர், சித்தலிங்கேஸ்வரரை தனது வீட்டிற்கு சிவபூஜை செய்ய அழைத்தார். சித்தலிங்கேஸ்வரரும் அதற்கு சம்மதித்தார்.

ஆனால், அவர் பூஜை செய்வது பிடிக்காத அப்பகுதியை சேர்ந்த சிலர், தாக்குதல் நடத்தினர்.

அப்போது ஏற்பட்ட பதற்றத்தால் அப்பகுதி மக்கள் ஊரைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால் சித்தலிங்கேஸ்வரர் அங்கிருந்து செல்லாமல் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்தார்.

காலப்போக்கில் அவரைச் சுற்றி புற்று வளர்ந்தது. நம்பண் ணாவின் பசு ஒன்று தினமும் அந்தப் புற்றின் மீது பால் சொரிந்ததாகவும், இதைக் கண்ட மக்கள் புற்றை உடைத்தபோது அதன் உள்ளே சித்தலிங்கேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

பின்னர் சித்தலிங்கேஸ்வரர், எடியூரில் தங்கி ஆன்மிகப் பணிகள் செய்ததாகவும், அங்கேயே நிர்விகல்ப சிவயோக சமாதி அடைந்ததால் அவருக்கு கோவில் கட்டப்பட்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.

கோவில் வடக்கு நோக்கி திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் உள்ளது. கோவில் கோபுரம் கம்பீரமாக புதுப்பொலிவோடு காட்சி அளிக்கிறது.

கோபுரத்தில் சித்தலிங்கரின் வாழ்க்கை நிகழ்வுகளும், சிவபெருமானின் லீலைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

தொண்டாட சித்தலிங்கர் சிவயோகத்தில் இருந்து சமாதி அடைந்த இடமே இக்கோவிலின் புனிதப் பகுதியாகும். சமாதியின் மீது விபூதி வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

அதன் மேற்பகுதியில் லிங்க வடிவ அமைப்பு காணப்படுகிறது. சித்தலிங்கேஸ்வரரின் உலோக உற்சவ மூர்த்தியும் இங்கு வழிபடப்படுகிறது.

எனவே, இது வழக்கமான சிவாலயத்தில் காணப்படும் “மூலவர் சிவலிங்கம்’ என்ற அமைப்பிலிருந்து வேறுபட்டுள்ளது.
இங்கு வீரபத்திர சுவாமிக்கும் தனிச் சன்னிதி உள்ளது.

சிவனின் வீர வடிவமாக வீரபத்திரர் இங்கு வழிபடப்படு கிறார். சித்தலிங்கேஸ்வர ருக்கு அளிக்கப்படும் அதே வழிபாடுதான் வீரபத்திரருக்கு செய்யப்படுகிறது.

இக்கோவிலின் மிக முக்கியமான வருடாந்திர விழா 15 நாட்கள் நடைபெறும் எடியூர் ஜாத்திரை (திருவிழா) ஆகும். உகாதிக்குப் பிறகு 7-ம் நாளிலிருந்து இது தொடங்குகிறது.

சித்தலிங்கேஸ்வரர் நிர்விகல்ப சமாதி அடைந்த நாளை நினைவுகூரும் வகையில் திருவிழா நடத்தப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் எடியூர் உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து ஹாசன், தர்மஸ்தலா, மங்களூரு, சிக்மகளூரு செல்லும் பேருந்துகள் எடியூர் வழியாகத்தான் செல்கின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *