தவெக அரசு காவிரி பிரச்சனையை தாமதப் படுத்தாமல், புறக்கணிக் காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

சென்னை:
தவெக அரசு காவிரி பிரச்சனையை தாமதப்படுத்தாமல், புறக்கணிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பகிர்தல் பிரச்சினை என்பது ஒரு தொடர்கதையாக இருக்கிறது.

இப்பிரச்சினை எப்போது தீரும்? ஒரு நல்ல விடியல் பிறக்காதா? என்ற ஏக்கமும், கவலையும் விவசாயப் பெருமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

நதிநீர் பகிர்வு நல்லமுறையில் நடைபெற வேண்டுமென, விவசாயிகள், பொதுமக்கள் நித்தமும் தங்களது தெய்வங்களை வேண்டி வழிப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டும் அல்லாது விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதியை தாயாக வணங்குகிறார்கள்.

காவிரி நதிநீர் அதிகமாக பயணமாகும் தமிழக டெல்டா பகுதிகளுக்குரிய, உரிமையான 4 டிஎம்சி நீரை காவிரி மேலாண்மை உத்தரவுப்படி வழங் காமல் கர்நாடகா அரசு தாமதப்படுத்தி வருகிறது. இது கண்டனத்திற்குரியது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த மனிதாபிமானமில்லாத செயலால் கடைமடை வரை வரவேண்டிய காவிரி நீர் வராததால், விவசாய நிலங்கள் வெய்யிலில் காய்ந்து, வெடித்து நாம் கண்ணீர் விடும் நிலையில் இருக்கின்றன.

எனவே, தவெக அரசு காவிரி பிரச்சனையை தாமதப் படுத்தாமல், புறக்கணிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பா சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், டெல்டா விவசாயிகளுக்கென தனி போர்க்கால கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பு விவரங்கள், பாசன நீர் விநியோகம், மழை மற்றும் வானிலை முன்னறிவிப்புகள், ஆகியவை விவசாயிகளுக்கு இந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.

விதை மற்றும் உரங்கள் இருப்பு, வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிர்க் காப்பீடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தகவல் களையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நேரடியாக வழங்குவதுடன், வேளாண்மைத் துறை மற்றும் நீர்வளத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளின் குறைகளுக்கு உடனடித் தீர்வு காணவும், தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளைப் போல, விவசாயக் கடன் கட்ட முடியாத நிலையில் தவித்து நிற்கும் விவசாயிகளுக்கும் உடனடி பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தவெக அரசை கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *