குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!

குலசேகரன்பட்டினம்;
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

மைசூருக்கு அடுத்த படியாக குலசேகரன் பட்டினத்தில் வெகுவிமர்சையாக நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்-கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கங்களை அணிந்து, ஊர், ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

திருவிழாவில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் 9-ம் நாளான நேற்று அன்னை முத்தாரம்மன் அன்னை வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர கோவிலுக்கு முன்பு எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரம்சம்ஹாரம் நடைபெறுகிறது.

இதைக்காண நேற்று முன்தினம் முதலே தமிழகம் மட்டு மல்லாது, மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

இன்று காலை குலசேகரன் பட்டினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது.

இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *