நகோயா:
5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் டி 47 பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.04 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
நடப்பு ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நிஷாத் குமார் வெல்லும் 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நீளம் தாண்டுதலில் டி 47 பிரிவிலும் நிஷாத் குமார் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதன் மூலம் ஒரே தொடரில் 2 தங்கப் பதக்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நிஷாத் குமார்.
இதற்கு முன்னர் அங்குர் தாமா (ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம்), ஷீத்தல் தேவி (வில்வித்தையில் மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட், கலப்பு அணிகள் பிரிவு) ஆகியோர் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 2 தங்கப் பதக்கம் வென்றிருந்தனர்.
ஆடவருக்கான வட்டு எறிதலில் எஃப் 44/64 பிரிவில் இந்தியாவின் தேவேந்தர் குமார் 49.71 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான ராகேஷ் வெள்ளிப் பதக்கமும், பர்தீப் குமார் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான வட்டு எறிதலில் எஃப்51/52/53 பிரிவில் இந்தியாவின் பிரணவ் சூர்மா 11.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீரரான ராம் ரத்தன் சிங் 10.35 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான டி 20 பிரிவு 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி பந்தய தூரத்தை 56.36 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் டி 12 பிரிவில் இந்தியாவின் சிம்ரன் பந்தய தூரத்தை 24.80 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான தேஜல்பென்டாமோர் (25.23) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
வில்வித்தையில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஷுத்தல் தேவி, ஜப்பானின் ஷினோரா அயாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் 19 வயதாகும் ஷீத்தல் தேவி 145-137 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மகளிருக்கான வில்வித்தையில் டபிள்யூ 1 பிரிவில் அரை இறுதியில் இந்தியாவின் சுவாதி சவுத்ரி 6-2 என்ற கணக்கில் தென் கொரியாவின் யுன்ஹீ லீயை தோற்கடித்தார்.
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப் 54 பிரிவில் இந்தியாவின் பிரதீப் குமார் 27.4 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவேளையில் எஃப் 53 பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் குமார் 17.88 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் மகளிர் டேபிள் டென்னிஸில் நேற்று மட்டும் இந்தியா 4 வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்தியாவின் ரபி பேபி சஹானா கிளாஸ் 9 பிரிவு அரை இறுதியில் 8-11, 2-11, 4-11 என்ற செட் கணக்கில் 5 முறை பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் மாவோ ஜிங்டியனிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். சஹானா தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
கிளாஸ் 6 பிரிவு அரை இறுதியில் பிராச்சி பாண்டே 9-11, 2-11, 8-11 என்ற செட்க ணக்கில் ஈராக்கின் பாராலிம்பிக் சாம்பியனான நஜ்லா அல்-தய்யேனியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இதன் மூலம் இவர்கள் இருவரும் நின்ற நிலையில் விளையாடும் பிரிவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் என்ற பெருமையைப் பெற்றனர்.
கிளாஸ் 6 பிரிவு அரை இறுதியில் பிராச்சி பாண்டே 9-11, 2-11, 8-11 என்ற செட்க ணக்கில் ஈராக்கின் பாராலிம்பிக் சாம்பியனான நஜ்லா அல்-தய்யேனியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இதன் மூலம் இவர்கள் இருவரும் நின்ற நிலையில் விளையாடும் பிரிவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் என்ற பெருமையைப் பெற்றனர்.
கிளாஸ் 4-5 பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பவினா படேல் 7-11, 5-11, 7-11 என்ற செட் கணக்கில் 8 முறை பாராலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஜாங் பியானிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
கிளாஸ் 3 அரை இறுதியில் இந்தியாவின் சோனல்பென் படேல் 7-11, 5-11, 6-11 செட் என்ற கணக்கில் தென் கொரியாவின் ஜியு யூனிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான கிளாஸ் 1 பிரிவில் இந்தியாவின் ஜெஹான் மதன் 4-11, 7-11, 3-11 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் ஹியோனுக்கிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நார்வால் 233.7 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும் வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
பவர்லிஃப்டிங்கில் வெள்ளி ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான பவர்லிஃப்டிங்கில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அசோக் குமார் மாலிக் 192 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் ஸ்ருஷ்டி அரோரா 214.7 புள்ளிகள் குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 11 பிரிவில் இந்தியாவின் பிரவீன் குமார் 13.86 தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான நீச்சலில் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் எஸ் 11 பிரிவில் இந்தியாவின் ஹிமான்ஷு நந்தால் பந்தய தூரத்தை 5:10.91 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே எஸ்எம் 7 பிரிவில் இந்தியாவின் நிரஞ்ஜன் முகுந்தன் 2:57.01 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான பாட்மிண்டனில் எஸ்எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், குமார் நிதேஷ் ஆகியோர் அரை அரை இறுதிக்கு முன்னேறினர்.
இதன் மூலம் இவர்கள் குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளனர். ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நேற்று மட்டும் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றது.
இதுவரை இந்தியா 9 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.