புதுடெல்லி:
மத்திய தொலைத்தொடர்பு துறையின் புதிய விதிகள் அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் செயல்படாது.
இந்தியாவில் சுமார் 131 கோடிக்கும் அதிகமான சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
நாடு முழுவதும் சுமார் 80 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர். சுமார் 50 கோடிக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
கடந்த 2023-ம் ஆண்டில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக நாடு முழுவதும் 13.1 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்மூலம் சுமார் ரூ.7,465 கோடி வரை மோசடி செய்யப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டில் ஆன்லைன் மோசடி புகார்களின் எண்ணிக்கை 19.2 லட்சமாக அதிகரித்தது.
கடந்த 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.22,495 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான சைபர் மோசடி கும்பல்கள், சிம் கார்டை பயன்படுத்தாமல் இணையத்தை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ் அப்காலில் பேசி அல்லது தகவல்களை அனுப்பி மக்களை ஏமாற்றி வருகின்றன.
இதற்கு தீர்வு காண மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய வழிகாட்டு விதிகளை (சிம் பைண்டிங்) வெளியிட்டது. இந்த விதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
இதன்படி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சேட், சேர் சாட், ஜியோ சாட், அரட்டை, ஜோஸ் ஆகிய 8 செயலிகள் செயல்படாது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிம் பைண்டிங் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது.
இதன்மூலம் சைபர் மோசடி குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். சைபர் குற்றங்களும் கணிசமாக குறையும்.