தேனி:
சபரிமலை வனப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்களை யானைகளிடம் இருந்து காப்பாற்ற துப்பாக்கிகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதாக, சன்னிதான சரக வன அலுவலர் டி.கே.மனோஜ் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை சன்னிதானம் மற்றும் சுற்றுப்பகுதியில் 40 பாம்புகள் பிடிக்கப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள அம்பலக்கடவு வனத்தில் விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சன்னிதான சரக வன அலுவலர் டி.கே.மனோஜ் கூறியதாவது: பாம்புகளைப் பிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு குழுக்கள் சன்னிதானத்திலும், ஒன்று மரக்கூட்டத்திலும் முகாமிட்டுள்ளன. பாண்டித்தவளம், உரல்குழி, புல்லுமேடு மலையேற்றப் பாதை மற்றும் சாரல்மேடு ஆகிய 4 இடங்களில் 24 மணி நேர ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
யானைகளை விரட்டுவதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிடம் 2 பம்ப் ஆக் ஷன் துப்பாக்கிகள் உள்ளன.
மேலும், பட்டாசுகளும் இருப்பு வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. யானை இந்த சப்தத்தை கேட்டு விலகி ஓடிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.