இந்தோனேசியாவில் சிக்கிய சீனாவிலிருந்து ரசாயனம் ஏற்றி சென்ற கப்பல் !!

ஜகார்தா:
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி சீனாவின் லியான்யுன்காங் துறைமுகத்தில் இருந்து எம்வி ஸ்டார் லைன் என்ற சரக்கு கப்பல், வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்துக்கு புறப்பட்டது.

கடந்த 7-ம் தேதி இந்த கப்பல் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெலவான் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பியது.

கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகளின் செயல்பாடுகளில் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் விசாரித்தபோது துறைமுகத்தில் இருந்து கப்பல் அவசரமாக வெளியேறிவிட்டது.

இதுகுறித்து இந்தோனேசிய துறைமுக அதிகாரிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் அந்நாட்டின் கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கொமோரோஸ் நாட்டில் எம்வி ஸ்டார் லைன் கப்பல் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், சட்டவிரோத நடவடிக்கை காரணமாக கப்பலின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்தோனேசிய கடற்படையின் ரோந்து கப்பலான கேஆர்ஐ சிகலு 857, சர்ச்சைக்குரிய எம்வி ஸ்டார்லைன் கப்பலை சுற்றி வளைத்தது.

சரக்கு கப்பலை சோதனை செய்தபோது 36 கன்டெய்னர்களில் 405 கிலோ சோடியம் பெர்குளோரேட் ரசாயனம் இருப்பது தெரியவந்தது.

அந்த ரசாயன மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் லட்சக்கணக்கான சிம் கார்டுகளும் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டன.

கப்பலின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. சீனாவில் இருந்து ரசாயனத்தை அனுப்பியது யார், அதை வங்கதேசத்தில் பெறுவது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு கப்பல் கேப்டன், மாலுமிகளிடம் பதில் இல்லை. இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “சீனாவில் இருந்து வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்ட 405 டன் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை இந்தோனேசிய கடற்படை கைப்பற்றி உள்ளது.

இந்த ரசாயனம் மூலம் 100 ஏவுகணைகளை தயாரிக்க முடியும். இதுகுறித்து இந்திய உளவுத் துறை ரகசிய விசாரணையை தொடங்கி உள்ளது” என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *