உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதல்வருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பு!!

சென்னை:
‘என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதல்வர் விஜய் அனுமதித்துவிட்டார்.

அந்த தைரியத்தில்தான் மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் தவெக எம்எல்ஏ’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதல்வருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?

தேசிய மகளிர் ஆணையமும், உயர் நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழகத்தில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல் துறைக்கு, முதல்வர் விஜய்யின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த எம்எல்ஏவைக் கைது செய்யத் தெரியவில்லையா?

கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தவெகவில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.

மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதல்வர் விஜய் அனுமதித்துவிட்டார்.

அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.

‘த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு, இப்படிப்பட்ட எம்எல்ஏ-வை அழைத்து ‘தீபாவளி பரிசு’ கொடுத்த முதல்வரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *