சென்னை:
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்தின் (‘டிஎன் ரெரா’) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பணீந்திர ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கட்டிடம் மனை விற்பனையை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் சட்டம், வாங்குவோர் மற்றும் விற்பவர்களுக்கு இடையிலான குடியிருப்பு மற்றும் வணிக பரிவர்த்தனைகளை முறைப்படுத்துகிறது.
இந்த சட்டப்படி மாநில அளவில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமம் (ரெரா), கட்டிடம், மனை விற்பனைத் துறையினை கண்காணிக்கவும், அதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைக் குழுமம் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் குழுமத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி க.பணீந்திர ரெட்டியையும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஏ.நசீர் அகமது மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோரையும் தமிழக அரசு நியமித்தது.
தற்போது இந்த குழுமத்தின் நிர்வாகக் குழுவில் சில மாற்றங்களை தமிழக அரசு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைவராக க.பணீந்திர ரெட்டி செயல்படுவார்.
உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ரீட்டா ஹரீஷ் தாக்கர், மைதிலி கே.ராஜேந்திரன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ.நசீர் அகமதுவுக்கு பதில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.கிருபாகரன் மதுரம், ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ‘டிஎன் ரெரா’ குழுமத்தின் தலைவர் பணீந்திர ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.