சிவகங்கை:
விபிஜி ராம்ஜி திட்டத்தில் ரூ.11 கோடிக்கான பணிகள் ஒதுக்கீட்டில் சிவகங்கை தவெக பெண் எம்எல்ஏ கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
விபிஜி ராம்ஜி திட்டத்தில் அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம், பேவர் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பொருட்கள் சார்ந்த பணிகள் அந்தந்த ஊராட்சிச் செயலர்கள் பெயரில் ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் இத்திட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்துக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது.
இப்பணிகள் அனைத்தையும் தவெகவினருக்கே எம்எல்ஏ குழந்தைராணி ஒதுக்கியதாகவும், மேலும் தங்களிடம் பணி ஒதுக்கீட்டுக்கு கமிஷன் கேட்பதாகவும் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பதிவுபெற்ற ஒப்பந்தகாரர்கள் நலச்சங்கத்தினர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆயுஷ்வெங்கட் வட்ஸிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் 120 ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளோம். எங்களுக்குப் பணிகளைப் பிரித்து கொடுக்காமல் தவெகவினருக்கு நேரடியாகப் பணிகளை ஒதுக்கிவிட்டனர்.
மேலும், பணிகளை எங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டதால் எம்எல்ஏ குழந்தைராணி 10 சதவீதம் கமிஷன் கேட்கிறார்.
மேலும் 2024-25-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு இதுவரை பணத்தை விடுவிக்கவில்லை. இதனால், மிகுந்த சிரமத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
அப்போது அங்கு வந்த ஒப்பந்ததாரர்கள் சிலர், பணி ஒதுக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை. எம்எல்ஏ தலையிடவும் இல்லை, என்றனர்.
எம்எல்ஏ குழந்தைராணியிடம் கேட்டபோது, ‘விபிஜி ராம்ஜி திட்டப் பணிகளை ஒதுக்கீடு செய்ததில் நான் தலையிடவில்லை.
நான் கமிஷன் கேட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய். என் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறுகின்றனர்’ என்றார்.