மதுரை:
“தமிழக சிறைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மின்வாரியத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படுகின்றன,” என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “சிறைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதேபோல், மின்வாரியத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் மின் பிரச்சினை என பொய்யான தகவல் ஊடகம் மூலம் பரப்பப்பட்டது.
மின் வாரியத்தை சீரமைக்க புதிய மின்மாற்றிகள் வாங்குகிறோம். புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கிறோம். மின் துறையில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஜெனரேட்டர் வாங்கியுள்ளோம். அதை சோதனை செய்து கொண்டிருந்தபோதுதான் குடியரசு துணைத் தலைவர் வந்திருந்தார். அவர் கிளம்பிவிட்டார் என நினைத்து மின் இணைப்பை மாற்றியபோது, சில வினாடிகள் மின்சாரம் தடைப்பட்டது” என்று விளக்கினார்.
மேலும்,முன்னாள் முதல்வருக்கு நேற்று போதிய பாதூகாப்பு வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அனைவருக்கும் உரிய பாதுகாப்புதான் வழங்கப்படுகிறது. அதில் எந்தக் குறையும் இல்லை.
கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன” என்று அமைச்சர் கூறினார்.