திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா!!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

நவகிரக தலங்களில் ‘ராகு’ ஸ்தலமாக விளங்கும் இங்கு ராகு பகவான் நாகக்கன்னி, நாகவல்லி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது அந்த பாலானது நீலநிறமாக மாறும். ராகு பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இது ராகு பெயர்ச்சி விழாவாக இக்கோவிலில் நடைபெறும்.

அதன்படி, ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடர்ந்து, நேற்று 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகளும், மதியம் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கலச அபிஷேகம் நடை பெற்றது.

தொடர்ந்து, ராகு பகவானுக்கு விசேஷ அலங்காரம் தங்க கவச அலங்காரம் சாத்தப்பட்டு மாலை 5.14 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

இதனையொட்டி இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராகு பகவானை தரிசனம் செய்ய கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து வழிபடு கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *