திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு பச்சை சாத்தி அலங்காரம்!!

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு பச்சை சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் வள்ளி மற்றும் தெய்வானை அம்பாள் சமேத சண்முகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனை முடிந்து தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது.


அவ்வகையில், விழாவின் 3-ம் நாளான நேற்று துளசியை கொண்டு பச்சை சாத்தி (பசுமை) அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் 6 சிவாச்சாரியார்கள் ஆறுமுகங்களுக்கும் தீபாராதனை காண்பித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், வயல்கள், காடுகள் யாவும் பச்சை பசேலென்று இருக்க வேண்டும், விவசாயம் செழிப்பால் செல்வம், ஐஸ்வர்யம் பெருகும் என்பதை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், நேற்று உற்சவர் சன்னதியில் மயில் சேவை அலங்காரம் நடந்தது. அதில் தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.


இரவு 7 மணியளவில் தந்த தொட்டி சப்பரத்தில் அமர்ந்து திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *