டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களுக்கு 10 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை:
டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களுக்கு 10 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான பாட்டில்களை வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுசுழல் பாதிப்பை தடுக்கும் வகையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதுபானம் விற்கும் பொது, பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்று விட்டு, பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்யும், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்றுள்ள கிளப்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘2022 ஆம் ஆண்டு சுற்றறிக்கை அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ் வரியாக, நவம்பர் 1 ஆம் தேதி முதல் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கிளப்களில் வாங்கும் மதுபான பாட்டில்களை உறுப்பினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவது இயலாது என்பதால், பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனத்திடம் வழங்க இயலவில்லை.

இந்த சங்கடங்களை கருத்தில் கொள்ளாமல் மதுவிலக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எனவே, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் தங்கள் கிளப்கள், நட்சத்திர விடுதிகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் எனவும், கிளப்களுக்கு செஸ் வரி விதிக்க முடியாது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *