அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னதாக துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி!!

திருவண்ணாமலை,
அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னதாக நேற்று துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (15-11-2026) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த விழாவினை முன்னிட்டு 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து இரவு கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பல்வேறு வண்ண மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் மங்கல வாத்தியங்கள், வாணவேடிக்கைகள் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

காவல் தெய்வ வழிபாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் சாமி சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வாக 24-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணியளவில் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *