10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை முதல்வரிடம் அழைத்துச் செல்வேன் – அமைச்சர் வினோத் உறுதி!!

கும்பகோணம்:
“10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை முதல்வரிடம் அழைத்துச் செல்வேன்” என வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி கேக் மற்றும் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தலைமை வகித்து, பள்ளி மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தஞ்சை மாவட்டத்தில் 1,670 பள்ளிகளில் பயிலும் 2,08,634 மாணவர்களுக்கு 25 கிராம் எடையிலான தலா 2 கேக்குகள் வீதம் 4,17,268 கேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் அனைவரும் கல்வியில் முழு கவனம் செலுத்தி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளேன்.

எனக்கு கூடப் பிறந்த தங்கைகள் யாரும் இல்லை. ஆனால், இத்தனை தங்கைகள் எனக்குக் கிடைத்துள்ளனர். இது எனக்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர் நிலைக்கு வர வேண்டும். அந்தச் சமயத்தில் உங்களைச் செதுக்கிய பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், உங்களுக்குக் கஷ்ட காலத்தில் உதவியவர்களையும் எக்காலத்திலும் மறந்துவிடக் கூடாது. உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

நடைபெற உள்ள 10-ம்,12-ம் வகுப்புப் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை தமிழக முதல்வரிடம் நேரில் அழைத்துச் சென்று வாழ்த்துப் பெற ஏற்பாடு செய்வேன்” என்று அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *