சென்னை:
பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை உள்பட தமிழகத்தின் 6 மாநகரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 2,355 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக 6 மாநகரங்களில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு ஒளிப்பதிவு மையங்களை அமைக்க தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டெண்டர் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி சென்னை, தாம்பரம், ஆவடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய 6 மாநகரங்களில் மொத்தம் 1,045 இடங்களில் 2,355 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதில் சென்னையில் 55 இடங்களிலும், தாம்பரத்தில் 75 இடங்களிலும், ஆவடியில் 75 இடங்களிலும், மதுரையில் 70 முக்கிய இடங்கள் மற்றும் 210 தனி இடங்களிலும், திருச்சியில் 70 முக்கிய இடங்கள் மற்றும் 210 தனி இடங்களிலும், கோயம்புத்தூரில் 280 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்புகள் ஆகியவை இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் சாதாரணமாக காட்சிகளை பதிவு செய்யும் கருவிகளாக மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன.
கடந்து செல்லும் வாகனங்களின் எண் பலகைகளை தானாகவே அடையாளம் கண்டு பதிவு செய்யும் வசதி இதில் இடம்பெறுகிறது.
திருட்டு வாகனங்கள் மற்றும் தேடப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும். எண் பலகை இல்லாத வாகனங்களையும் கண்டறிய முடியும்.
மேலும், முக அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட நபர்களின் முகங்களை அடையாளம் காணும் திறன் கொண்டதாக இந்த அமைப்பு இருக்கும்.
சுமார் 50 லட்சம் முகங்கள் அடங்கிய தரவுத்தளத்தில் இருந்து 5 விநாடிகளுக்குள் தேடப்படும் நபர்களை அடையாளம் காணும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு மாநகரிலும் தனித்தனியாக நவீன கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன. அங்குள்ள பெரிய காணொலி திரைகள் மூலம் அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஒரே இடத்தில் இருந்து காவல்துறையினர் கண்காணிக்க முடியும். இந்த மையங்கள் காவல் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட உள்ளன.