திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு மூலவர் முருகன் தினமும் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், திருவாபரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.
கோவில் தேவர் மண்டபத்தில் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தினமும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். முக்கிய நிகழ்வாக நாளை (15-ந்தேதி) மாலை உற்சவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்வார்கள். வருகிற 16-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு தினமும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான நந்தி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலிலும் கந்த சஷ்டி விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு செல்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நித்யா, அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், அறங்காவலர்கள் வி.சுரேஷ்பாபு, ஜி.உஷாரவி, க.மோகனன், மு.நாகன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.