தமிழகத்தில் மனித உயிர்களின் பாதுகாப்பு எங்கே? கடலூரில் ஒரே நாளில் 12 பேர் காணாமல் போகும் அளவிற்கு காவல் துறையின் கண்காணிப்பு பலவீனமாகிவிட்டதா? – வேல்முருகன் விமர்சிப்பு!!

சென்னை: ‘
தமிழகத்தில் மனித உயிர்களின் பாதுகாப்பு எங்கே? கடலூரில் ஒரே நாளில் 12 பேர் காணாமல் போகும் அளவிற்கு காவல் துறையின் கண்காணிப்பு பலவீனமாகிவிட்டதா?’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இளம் பெண்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன.

காணாமல் போனவர்களில் 16 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் அடங்கியிருப்பது இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

ஒரே நாளில் ஒரு மாவட்டத்தில் இத்தனை பேர் காணாமல் போகும் சூழல் உருவாகியிருப்பது சாதாரணமானதல்ல.

ஒவ்வொரு குடும்பமும் தங்களது பிள்ளைகளையும் உறவினர்களையும் எங்கு தேடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில், காவல்துறையின் விசாரணை வேகமும், தேடுதல் நடவடிக்கைகளின் முன்னேற்றமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம்.

ஒரே நாளில் 12 பேர் காணாமல் போகும் அளவிற்கு காவல் துறையின் கண்காணிப்பு பலவீனமாகிவிட்டதா? 7 இளம் பெண்கள் மாயமான விவகாரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அரசின் வாக்குறுதிகள் எங்கே? சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவாயின?

புகார் பதிவதோடு காவல்துறையின் கடமை முடிந்துவிடுகிறதா? காணாமல் போனவர்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கை எங்கே? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல்களை அரசு வழங்கியுள்ளதா? காணாமல் போன ஒவ்வொருவரும் பாதுகாப்பாக மீட்கப்படும் வரை அரசு பொறுப்பேற்குமா?

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கண்ணீருக்கு ஆறுதல் வார்த்தைகள் மட்டும் தீர்வாகாது. ஒவ்வொருவரையும் விரைந்து கண்டறிந்து, அவர்கள் காணாமல் போனதற்கான பின்னணியை வெளிக்கொண்டு வந்து, குற்றச்செயல் உறுதிப்படுத்தப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் பாதுகாப்பு என்பது அரசின் விளம்பரத்திற்கான வாசகம் அல்ல. அது அரசின் அடிப்படைக் கடமை. பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவானால், ஆட்சி நிர்வாகத்தின் பாதுகாப்பு வாக்குறுதிகளுக்கு என்ன மதிப்பு?

காணாமல் போன அனைவரையும் விரைந்து மீட்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *