சென்னை: சமரச தீர்வு மன்றத்தில் நடுவராக பணியாற்றுவதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையும் சிறப்புப்பயிற்சியும் தேவை என்றும் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இதற்கான பயிற்சி அவசியம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
‘பிரிசால்வ் 360’ என்ற ஆன்லைன் சமரச தீர்வு அமைப்பு சார்பில், ‘இணையவழி சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்பம், நிறுவனங்கள் சார்ந்த நடுவர் மன்றதீர்வு’ என்ற தலைப்பில் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் நீதிபதி கண்ணன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய சட்டத்துறை செயலாளர் டி.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: இந்தியாவில் வங்கி, வணிகம், நிதி நிறுவனங்கள் சார்ந்த சட்ட பிரச்சினைகளை நீதிமன்றங்களுக்கு வெளியே விரைவாகத் தீர்வு காணும் வகையில் ‘சமரச தீர்வு மன்றம் முறை’ அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
ஆனால், இம்முறை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை குறிப்பாக, வங்கிகள் அல்லாத நிதிசார் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில், சமரச தீர்வு மன்றங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.
இத்தகைய நிறுவனங்கள் தொடரும் பெரும்பான்மை வழக்குகள், கடன் வழங்கப்பட்ட வாகனம் மற்றும் இயந்திரங்களைப் பறிமுதல் செய்வது தொடர்பான வழக்குகள்தான். ஆனால், இவற்றின் மீதான சமரச தீர்வு மன்ற நடவடிக்கையில், நீதிமன்றங்களுக்குச் சென்று இடைக்கால உத்தரவு கோரி அவை முடக்கப்படுகின்றன.
சில வழக்குகளில் நடுவர் நியமிக்கப்பட்ட பின்னரும்அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் உள்ளன. அதேபோல் இத்தகைய சமரச மன்றங்களில் நடுவர்களை நியமிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள நிறுவனங்கள் வாயிலாக நடுவர்கள் நியமிக்கப்பட்டாலும், மற்றொரு தரப்பு தங்களது ஒப்புதல் இன்றி ஒரு தலைப்பட்சமாக நியமனம் செயல்பட்டதாக நீதிமன்றங்களுக்குச் சென்று விசாரணையை முடக்கி விடுகின்றனர்.
இவற்றை முறைப்படுத்த சமரச தீர்வு மன்றங்களை நடத்தும் அமைப்புகளுக்கு நீதிமன்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
அந்த அமைப்புகள் தகுதியும் நேர்மையும் கொண்ட நடுவர்கள் குழுவை உருவாக்கி வழக்கின் தன்மைக்கு ஏற்ப நடுவர்களை நியமிக்க வேண்டும். இதற்கான அங்கீகார நடைமுறை உருவாக்கப்பட்டால், நடுவர்களை நியமிப்பதில் நீதிமன்றங்களின் சுமை குறையும்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் அனைவரும் நடுவர் மன்ற வழக்குகளை கையாளத் தகுதியானவர்கள் என்று கூற முடியாது.
சமரச தீர்வு மன்றத்தில் பணியாற்றுவதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையும் சிறப்புப்பயிற்சியும் தேவை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இதற்கான பயிற்சி அவசியம்.
சமரச தீர்வு மன்றங்களுக்கு தரமான நேர்மையான நடுவர்களை அடையாளம் காண்பதே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சவால்.
இந்த அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்ட பிறகே, ஆன்லைன் சமரச தீர்வு முறையை முழுமையாகச் செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.