மயிலாடுதுறை:
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுழுக்கு தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். காவிரியில் தண்ணீர் இல்லாததால், போர்வெல் நீரில் பக்தர்கள் புனித நீராடினர்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. அதனால், இத்தலம் காசிக்கு நிகராக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நடத்தப்படும் துலா உற்சவம் நிகழாண்டு அக்.18-ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கியது. இதில், முக்கிய திருவிழாவாக கடைமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத ஐயாறப்பர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் தெற்கு கரையிலும், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் வடக்கு கரையிலும் எழுந்தருளினர்.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தெற்கு கரையிலும், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வடக்கு கரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் இல்லாததால் 2 ஆதீனகர்த்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் போர்வெல் நீரில் புனிதநீராடினர். பின்னர், 2 கரைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, தருமபுரம் ஆதீனகர்த்தர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்திபெற்ற கடைமுழுக்கு தீர்த்தவாரியின்போது காவிரியில் பக்தர்கள் புனிதநீராட தண்ணீர் கிடைப்பதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.
காவிரியில் கழிவுநீர் கலப்பதும், புனித நீராட தண்ணீர் இல்லாததும் மனவருத்தத்தை அளிக்கிறது” என்றார்.
நீதிமன்ற அவதிமதிப்பு வழக்கு: மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான கே.ராஜேந்திரன் கடைமுழுக்கு தீர்த்தவாரிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு நவ.13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, “ஏற்கெனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கடைமுழுக்கு தீர்த்தவாரிக்கு நவ.16-ம் தேதிக்குள் காவிரி தண்ணீர் துலாக்கட்டத்தை சென்றடையும்” என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதியளித்ததால், நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
ஆனால், கல்லணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படாததால், நீதிமன்றத்தில் அரசு தரப்பு உறுதியளித்தபடி மயிலாடுதுறை பகுதிக்கு காவிரி நீர் நேற்று மாலை வரை வரவில்லை.
இதனால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் போர்வெல் நீரில் புனித நீராடி ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால், அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.