இஸ்ரேலின் மொசாட் உளவாளி அமைப்பின் தலைவர் ரோமன் கோஃப்மேன் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக உள்ளதாக ஈரான் ராணுவ தளபதி சையத் மஜித் மூசாவி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க ராணுவம் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ஈரான் ராணுவமும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ தளங்களை மறைந்திருந்து, நிலத்தடியில் இருந்து தாக்கும் புதிய ஏவுதல் தளத்தின் புகைப்படங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் வெளியிட்டது.
இதுகுறித்து ஈரான் வெளியிட்ட வீடியோ பதிவில், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதிகள், ஒரு பரந்த நிலத்தடி ராணுவ தளத்தை சுற்றி பார்ப்பது காட்டப்பட்டது.
இந்த தளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு திரவ எரிபொருள் ஏவுகணைகளை செலுத்தும் வகையில், ஏவுகணை தளம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த திரவ எரிபொருள் ஏவுகணைகளை செலுத்துவது மிகவும் எளிதாக பார்க்கப்படுகிறது; அதே நேரத்தில் இந்த ஏவுதளமானது நிலத்தடியில் அமைந்திருப்பதால், இதனை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குவது கடினமாக பார்க்கப்படுகிறது.
ஈரான் வெளியிட்டுள்ள காணொளியில், ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணையும், நீண்ட தூரம் வரை சென்று தாக்கும் கோர்ரம்ஷாஹர் ஏவுகணையும் இடம்பெற்றுள்ளது.
இந்த சூழலில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் இயக்குநரான ரோமன் கோஃப்மேன், அமெரிக்காவுக்கு பயணம் செய்து, ஈரான் மீது தாக்குதல்களை நடத்த அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் வான் பாதுகாப்பு தளபதியான பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி கூறுகையில், ஈரான் தங்கள் ராணுவ தாக்குதல் திறன்களை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் ராணுவம், எதிரி நாடுகளின் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், தங்களின் ஏவுகணைகளையும் ஏவுதள உபகரணங்களையும் மேம்படுத்தியுள்ளதாகவும் மூசாவி குறிப்பிட்டுள்ளார்.