மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அமைச்சர் விஸ்வநாதன்!!

சென்னை:
மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழக அரசின் உயர் கல்வித் துறை சார்பில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

இந்த முகாமை உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கிவைத்துப் பேசியது: “மாணவர்கள் படித்து முடித்த உடனேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் உயர்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

இதற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து வருகிறோம். கலை அறிவியல் கல்லூரிகளில் வளாக நேர்காணல் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு.

பொறியியல் கல்லூரிகளில் சுமார் 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால், எங்களை பொறுத்தவரையில் படித்து முடிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்தான் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தமிழகத்தில் முதல்முறையாக நடத்தப்படுகிறது.

மைக்ரோசாப்ட், டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

நமது மாணவர்களுக்கு இந்த தொழில்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இதுதொடர்பாக உயர் கல்வித் துறையானது தொழில் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘டிரிப்பில் இ’ (Education-Employability-Entrepreneurship-EEE)- என்ற ஒரு முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கும், அவர்களை தொழில்முனைவோர் ஆக்கவும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் ஒரேயொரு வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் மட்டுமே இருந்து வருகிறார்.

மாணவர்கள் வேலைவாய்ப்பில் ஆர்வமும் விருப்பமும் கொண்ட 5 பேராசிரியர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும தொழில் ஆலோசனை குழு செயல்பட வேண்டும்.

கல்லூரிகளில் பாடத்திட்டத்தை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டியது அவசியம். ஏஐ, டேட்டா சயின்ஸ், கிளவுட் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று அமைச்சர் பேசினார்.

உயர் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் தலைமையுரை ஆற்றி பேசும்போது, “பாடத்திட்டம் மற்றும் கற்பிக்கும் முறை, தேர்வுச் சீர்திருத்தம், வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புத்திறன் ஆகிய 3 விஷயங்களில் உயர்கல்வித்துறை தற்போது அதிக கவனம் செலுத்துகிறது.

பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் தகவல் தொடர்புத் திறன் உள்பட 6 வகையான மென்திறன்களுடன் வெளிவர வேண்டும். வேலைவாய்ப்புக்கான தேர்வை முக்கிய தேர்வாக கருதும் வகையில் மாணவர்களிடம் மனப்பான்மை சார்ந்த மாற்றம் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி கல்வி கவுன்சில் துணை தலைவர் எம்.பி.விஜயகுமார் பேசும்போது, “நமது கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் நன்றாக இருக்கிறது.

மதிப்பீட்டு முறையை, அதாவது கேள்விகள் கேட்கும் தரத்தைத்தான் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

தேர்வுகளில் 60 சதவீத கேள்விகள் சிந்தனைத்திறனை சோதிக்கும் வகையிலும் 40 சதவீத கேள்விகள் நினைவாற்றலை பரிசோதிக்கும் வகையிலும் கேட்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலும் வலியுறுத்துகின்றன.

மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற நிறுவனங்கள் எதிர்பா்ர்க்கும் திறன்கள் மிகவும் முக்கியமானவை. கல்லூரிகளில் வழங்கப்படும் அகமதிப்பீடு வேலைவாய்ய்ப்புத் திறன்களை மதிப்பிடும் வகையில் அமைய வேண்டும்” என்றார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் வரவேற்றார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர் – செயலர் கனிமொழி நன்றி கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *