லக்னோ:
சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-8 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஸ்ரேயா பாலாஜி, பிரணவி நடராஜன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா, உன்னதி ஹூடா, அன்மோல் ஹார்ப், தஸ்னிம் மிர் ஆகியோர் கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.
தன்வி சர்மா 2-வது சுற்றில் 18-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் போராடி இந்தோனேஷியாவின் முதியாரா ஆயு புஸ்பிதாசாரியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்றது.
உன்னதி ஹூடா 21-14, 21-18 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வாலையும், தஸ்னிம் மிர் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரையும் வீழ்த்தினர். அன்மோல் ஹார்ப் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அஷ்மிதா சாலிஹாவை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 21-12, 22-20 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் மேல் காட்டோன், லூகாஸ் ரெனோயர் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தது.